நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையில் நடைபெற்றது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டம் – மக்கள் நலன் சார் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Wednesday, June 14th, 2023

வவுனியா மாவட்டத்தின் இவ்வருடத்திற்கான இரண்டாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது, வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கால்நடைகள் திருட்டு அது தொடர்பில் மக்களுக்கு பொலிஸார் மீதான நம்பிக்கையின்மை, வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் வைப்பதற்கான சட்டவிரோத கட்டிடங்களை நகரசபை அகற்றுமாறு விடுத்த கோரிக்கைகள், வீரபுரம் பிரதேசத்தில் சிலர் சட்டவிரோதமாக காணிகளை அடாத்தாக கையகப்படுத்தல், கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு முன்பாக சட்டவிரோதமான முறையில் இடம்பிடித்து பணம்பெறல் மற்றும் போதைப்பொருள் விற்பனை, வவுனியா வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பற்றாக்குறை மற்றும் வவுனியாவில் தனியார் மருந்தகங்களில் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாளர்கள் இன்மை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்ததுடன், அது தொடர்பான சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன், செல்வம் அடைக்கலநாதன்,  வினோநோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், பிரதம செயலாளர் சமன்பந்துலசேன, மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர். சத்தியமூர்த்தி,   உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிசார், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: