நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

Tuesday, January 9th, 2024

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தம்மிடம் விளக்கம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டதன் பின்னரே இந்த முடிவுக்கு வந்ததாகவும் சபாநாயகர் அபேவர்தன அறிவித்துள்ளார்.

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது வெளியிட்ட சபாநாயகரின் அறிவிப்புகளிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் சுட்டிக்காட்டியதாவது,

“1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின் 66 மற்றும் 67 ஆம் பிரிவுகள், குற்றவியல் நடைமுறையின் பிரிவு 16 (1) மற்றும் நிலையியற் கட்டளைகள் 77(1), 77(2) மற்றும் 77 ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சட்டமா அதிபர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

சட்டமா அதிபரின் முடிவின்படி எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அவர் ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம்” என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகருக்கு ஆலோசனை வழங்க சட்டமா அதிபருக்கு உரிமை இல்லை. அத்துடன், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரின் நடத்தை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகள் ஏன் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதே கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், “சபாநாயகருக்கு ஆலோசனைகளை வழங்கவும் முடிவுகளை எடுக்கவும் சட்டமா அதிபருக்கு உரிமை உள்ளது. சபாநாயகரின் உரிமைகளுக்கு தயவு செய்து மதியுங்கள்.“ என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: