நாடாளுமன்றின் செயற்பாடுகளை ஒன்லைன் முறையில் முன்னெடுக்கத் திட்டம் -பணியாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு வீட்டில் இருந்தே பணிகளை முன்னெடுக்கவும் வழிவகை!

Wednesday, May 13th, 2020

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்ற அமர்வுகள், வாக்கெடுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இணையத்தின் ஊடாக முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளில் இணைய வழியாக நாடாளுமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை நிலையில் இலங்கையிலும் இணைய வழியில் நாடாளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து ஆராயும் கூட்டமொன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

ஒன்லைன் முறையில் நாடாளுமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் நாடாளுமன்றில் ஏதேனும் ஓர் பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே வாட்ஸ்அப் மூலம் வாக்கெடுப்பில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கேள்விகளை எழுப்பவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றின் செயற்குழுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த ஒன்லைன் முறைமை உதவியாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் நாடாளுமன்றில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு வீட்டில் இருந்தே பணிகளை மேற்கொள்ளக்கூடிய முறைமை உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: