நாங்கள் ராஜபக்சர்களை இரகசியமாக சந்திக்கவில்லை – ஒளித்தும் போகவில்லை – பிழைகளை மூடி மறைக்க பொய்களை அவிழ்த்து விடுகின்றது தமிழ் காங்கிரஸ் – ஜனநாயக போராளிகள் கட்சி சுட்டிக்காட்டு!

Thursday, September 29th, 2022

தங்களின் பிழைகளை மூடி மறைக்க அவசர அவசரமாக ஊடக சந்திப்பினை நடத்தி பச்சை பொய்களை சுகாஸ் அவிழ்த்து விட்டுள்ளார். பொய்களை கூறி முன்னாள் போராளிகள் மீது அவதூறை பரப்பியமைக்கு எமது கண்டனங்களையும் தெரிவிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.

தங்களின் பிழைகளை மூடி மறைக்க அவசர அவசரமாக ஊடக சந்திப்பினை நாடத்தி முன்னாள் போராளிகள் மீது அவதூறு பரப்பியுள்ளார்.

திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தலின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரசினர் தான் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்.

அடுத்து 2017 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்காக நாம் அவ்விடத்தை துப்பரவு செய்யும் போது அகில இலங்கை தமிழ் காங்கிரசினர் வந்து எங்களோடு கதைத்தார்கள். நாங்கள் இரு தரப்பும் சேர்ந்து ஒன்றாக செய்வோம். என எங்களுடன் பேச்சுக்களை நடத்தினர்.

மறுநாள் கட்சி அலுவலகத்திற்கு எம்மை அழைத்து, கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் கதைத்து நாங்கள் சம்மதம் தெரிவித்த பின்னரே இரு தரப்பினரும் சேர்ந்து தான் 2017ஆம் ஆண்டு நினைவேந்தலை நாம் செய்தோம்.

அப்ப நாங்கள் யார் ? இப்ப 2015 ஆம் ஆண்டு எங்களை மஹிந்தவினால் உருவாக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். அப்ப ஏன் 2017ஆம் ஆண்டு எங்களை அழைத்து கதைக்க வேண்டும்?

இவர்கள் தென்னிலங்கையில் உள்ள  தமது சொத்துக்களை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறார்கள். அவர்களின் சொத்துக்களை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வேணும். அதற்கு போராளிகளின் தியாகங்கள் தேவை.

இதேவேளை நாங்கள் ஜீ ஜீ பொன்னம்பலத்தின் சிலைக்கு மாலை போட வரவில்லை. அவர்கள் விரும்பினால்,  ஜீ. ஜீயின் உருவ படத்தை பொத்துவில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஊர்வலமாக கொண்டு வரட்டும். அப்போது தெரியும் மக்கள் அவர்களுக்கு தரும் வரவேற்பு.

நாங்கள் மஹிந்த ராஜபக்சேவையோ கோட்டாவையோ இரகசியமாக சந்திக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எங்களை சந்திக்க வர சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. நாங்கள் போனோம். அது ஊடகங்களுக்கும் தெரியும். பொய் சொல்லி ஒளித்து போகவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: