நல்லையம்பதி வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று – சிறிய தேரில் அமைதியாக வலம்வந்து பக்தர்களுக்கு நேரலையில் அருள் பாலித்தார் முருகப்பெருமான்!

Sunday, September 5th, 2021

வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக்கந்தன் மஹோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்று காலை சுகாதார நடைமுறைகளை கருத்தில்கொண்டு பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் அருள்பாலித்து விளங்கும் அலங்கார கந்தனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்து விளங்கும் நல்லையம்பதி முருகன், வள்ளி, தெய்வானை, ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேக, ஆராதனைகள் என்பன இடம்பெற்றன.

இதனை தொடர்ந்து தங்கரத்திருத்தேரில் முருகப்பெருமான் ஏறி உள்வீதி ஊடாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த திருவிழா ஆலயபிரதம குரு சிவஸ்ரீ சி.வைகுந்தன் குருக்கள் தலைமையிலான அந்தணர் சிவாச்சாரியர்களால் நடத்திவைக்கப்பட்டது.

இதேவேளை வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்றையதினம் நல்லூர் ஆலய உள்வீதியில் இடம்பெறுகின்ற நிலையில் தற்போது உள்ள கொரோனா இடர்  நிலையில்  அடியவர்கள் ஒன்று கூடினால் தொற்று  பரவல் ஏற்பட  கூடிய நிலை காணப்படுவதன் காரணமாக நல்லூர் ஆலய தேர் உற்சவத்தினை தரிசிக்க  அடியவர்கள் ஆலயத்திற்கு வருவதை தடுக்கும் முகமாக  நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆலய வளாகத்தில் அடியவர்கள் ஆலய வளாகத்தில் வராதவாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆலய உற்சவத்தின் போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி யாரும் உட்  செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதோடு ஆலயத்திற்கு முன்பாக பொலிசாரின் பேருந்து வண்டி ஒன்று வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டு நல்லூர் ஆலய வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக நல்லூர் ஆலயத்தின்  மஹோற்சவம் கடந்த 13 ஆம் திகதியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று இரதோற்சவமும், நாளை தீர்த்த உற்சவமும் இடம்பெற்று பின்னர் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: