நல்லுறவை வலுப்படுத்த இலங்கைக்கு அனைத்து உதவியையும் வழங்குவோம்- ரஷ்ய ஜனாதிபதி !

Friday, March 24th, 2017

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான  நலலுறவை வலுப்படுத்தி இலங்கைக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ரஷ்யாவினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ விஜயத்துக்கான அழைப்புக்கமைய ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றது.

ரஷ்ய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகையான கிரெம்ளின் மாளிகைக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உணவுபூர்வமாக வரவேற்றார். அரச தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற நட்புறவு உரையாடலின் பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

இலங்கை – ரஷ்ய இருதரப்பு உறவுகளுக்கு 60 ஆண்டு நிறைவடையும் வேளையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின். இருநாட்டு பொருளாதார, வர்த்தக, அரசியல் உறவுகளை மேலும் பலப்படுத்தி உறுதியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்., இலங்கைக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது அழைப்பை ஏற்று ரஷ்யாவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டதற்காக விளாடிமிர் புட்டின் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

கோவா மாநாட்டில் சிறிது நேரத்தில் உருவான நட்புறவுக்கமைய அழைப்பு விடுத்ததற்காக ரஷ்ய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உலகின் பலமிக்க தலைவரிடமிருந்து கிடைத்த இந்த நெருக்கமான நட்பு தொடர்பில் தான் மிகவும் பெருமையடைவதாகவும், அந்த அழைப்பை இருநாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதற்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

தமது கட்சியின் நிறுவுனர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தலைமையில் இலங்கை – ரஷ்ய உறவுகள் ஆரம்பமானதுடன், அந்த உறவுகளை மேலும் பலப்படுத்தி முன் கொண்டு செல்ல வேண்டியது தனது பொறுப்பாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் தான் ரஷ்யாவுக்கு வருகைதந்ததையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை – ரஷ்ய இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் அரச தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான மீன்பிடி ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

Related posts: