நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாடு கட்டியெழுப்பப்படுகிறது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், நாட்டை இன்னும் குறுகிய காலத்திலேயே நெருக்கடியிலிருந்து தன்னால் மீட்டிருக்க முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாடு கட்டியெழுப்பப்படுகிறது. தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திக்கும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்த வழியாகும்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக பெற்றுக் கொள்ளும் அனுபவத்தின் அடிப்படையில் எதிர்க் கட்சிகள் அடுத்த தேர்தல் மூலம் ஆட்சி அதிகாரத்தை பெற முயற்சிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை எனவும், ஆளும் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க தான் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து அரசியல் கட்சிகளும் தமக்கு வழங்கிய ஆதரவை நன்றியுடன் நினைவு கூருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டை சரியான திசையில் கொண்டு சென்று பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது.

ஐந்து வருடங்களானாலும் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முடியாதென எதிர்கட்சிகள் கூறினாலும், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து 16 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் தான் மீட்டெடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தால், இன்னும் சில மாதங்களுக்கு முன்னதாகவே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றியிருக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: