“நட்பின் சிறகுகள்” – இலங்கை விமானப்படையின் 2024” கண்காட்சியின் நிறைவு நாள் இன்று!

Sunday, March 10th, 2024

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் ௲ 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று 5 ஆவது நாளாகவும் இடம்பெற்றது.

“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமாகிய கண்காட்சி இன்று (10) இறுதி நாளாக முற்பகல் 10 மணிமுதல் இரவு 11 மணி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நேற்றைய நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதன்போது பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.

குறித்த நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொழும்பில் நடைபெறவுள்ள விமான துறைசார் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கோரினார்.

இதன்போது விபரங்களை தருமாறும், அதுகுறித்து பரிசீலிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். மேலும் மாணவனுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை பாடசாலை சீருடையில் வரும் மாணவர்கள் இந்த நிகழ்வை முற்றுமுழுதாக இலவசமாக பார்வையிடலாம். ஏனையோர் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி நிகழ்வை கண்டுகளிக்க முடியும்.

இந்த கண்காட்சி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் முழுத் தொகையும் வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய 73 பாடசாலைகளின் புனர் நிர்மாணத்துக்கும், பாடசாலையில் கல்வி கற்கும் பின்தங்கிய மாணவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கும், 73,000 பாடசாலை புத்தகங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 73,000 மரக்கன்றுகளை நடும் செயற்றிட்டமும் இதன்மூலம் ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான பூரண அனுசரணையை வட மாகாண ஆளுநர் செயலகம் ஊடாக இலங்கை விமானப்படை பெற்றுள்ளது.

இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் உதயனீ ராஜபக்ஷவின் கண்காணிப்பு மற்றும் வழிக்காட்டுதல்களின் ஊடாக இந்த கண்காட்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: