தேவையற்ற அச்சம் வேண்டாம் – கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது – ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிப்பு!

Tuesday, March 9th, 2021

ஊர்காவற்றுறை பிரதேசத்ததை அச்சுறுத்தும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக பொறுப்பாளருமான மருதயினார் ஜெயகாந்தன் இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டு வருபவர்களது எண்ணிக்கை உயர்ந்து வருவது தொடர்பில் எமது செய்திப் பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நாட்டை அச்சுறுத்தும் கொரோனாவின் தொற்று தற்போது எமது பிரதேசத்திலும் ஒரு சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பார் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஊர்காவற்றுறை பிரதேசத்தின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் 16 பேருக்கு அண்மைய நாள்களில் தொற்றுறுதியாகியுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் உறுதி செய்துள்ளார். அதேநேரம் இத்தொற்று வெளியிடங்களுடன் தொடர்புடையவர்களுக்கே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாம் எமது பிரதேச சபையின் வளங்களை கொண்டு சுகாதார பாதுகாப்பு மற்றும்  விழிப்புணர்வு நடைமுறைகளை முன்னெடுத்து வருவதுடன் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கும் இவ்விடயம் தொடர்பில் கொண்டு சென்று சுகாதார அமைச்சினுடாக எமது பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டுள்ளோம்.

அதேநேரம் எமது பிரதேசத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான சில இறுக்கமான கட்டுப்பாடுகளையும் முன்னெடுத்துள்ளோம். அந்தவகையில் எமது பிரதேசத்தை அச்சுறுத்தும் கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதுடன் அது சார் தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்புகளையம் எந்நேரத்திலும் வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள தவிசாளர் ஜெயகாந்தன், கொரோனா அச்சுறுத்தலால் முடக்கப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கான வாழ்வாதார மற்றும் அடிப்படை தேவைகளையும் அவர்களுக்கான நிவாரணங்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினூடாக பெற்றுக்கொடுத்தும் வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அடிப்படைத் தேவைகளை பெற்றுத்தாருங்கள் - பளை செல்வபுரம் பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்...
சுற்று நிருபங்களை கருத்திற் கொள்ளாது நிவாரணங்கள் வழங்குங்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல!
மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் - நிதி அம...