சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 8000 பேரை நாடு கடத்த நடவடிக்கை!

Sunday, June 23rd, 2019

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 8000 வெளிநாட்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

விசா நிறைவடைந்த நிலையிலும் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 8000 வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கும், அவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்கும் அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது 7,900 வெளிநாட்டவர்கள் தங்கள் விசா நிறைவடைந்தும் இலங்கையில் தங்கியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் பசான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதிகமானவர்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கை வந்திருந்த போதிலும், தற்போது கட்டுமான தளங்கள், உணவகங்கள், விவசாயத் துறை மற்றும் வணிக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், அவர்களில் பெரும்பாலோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பசான் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் 1,680 பேர் இந்தியாவில் இருந்தும், 936 பேர் பாகிஸ்தானில் இருந்தும், 683 பேர் சீனாவில் இருந்தும், 291 பேர் மாலைத்தீவில் இருந்தும், 152 பேர் பங்களாதேஷில் இருந்தும், 42 ஜப்பானில் இருந்தும் வந்துள்ளனர்.

ஏனைய 541 பேர் நெதர்லாந்தில் இருந்தும், 167 பேர் உக்ரைனில் இருந்தும், 172 பேர் சவுதி அரேபியாவில் இருந்தும், 157 பேர் ரஷ்யாவில் இருந்தும், 157 லெபனானில் இருந்தும், 155 பேர் அவுஸ்திரேலியாவில் இருந்தும், 130 பேர் நைஜீரியாவில் இருந்தும், 110 பேர் பிரான்ஸில் இருந்தும், 44 பேர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. அமைச்சரவை ஒப்புதல் பெற்றதன் பின்னர், குறித்த வெளிநாட்டவர்கள் கொழும்பில் ஒரு இடத்திற்கு அழைத்து வரப்பட்டு நாடுகடத்தப்படும் வரை அங்கேயே தடுத்து வைக்கப்படுவார்கள் எனவும் பசான் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்

Related posts:


இலங்கை பொறியியல் நிறுவனம் மாலைதீவிற்கான B787 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தை உறுதி செய்தது!
பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ...
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை - கட்சித் தலைவர்களின் கூட்டத்த...