தேர்தல் முடிவுகளில் மாற்றமா? வாய்ப்பே இல்லை என்கிறார்  மஹிந்த தேசப்பிரிய!

Sunday, February 18th, 2018

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தேர்தல் பெறுபேறுகளை மாற்றும் முயற்சி நடைபெற்றதாக பரவும் வதந்தியை மஹிந்த தேசப்பிரிய முற்றாக நிராகரித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு அவர் தனது பேஸ்புக் பதிவொன்றின் ஊடாக விளக்கமளித்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் பெறுபேறுகளை தாங்கள் முதலில் வெளியிட வேண்டும் என்பதற்காக ஊடக நிறுவனங்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பணம் செலுத்தியிருந்தன. இதன் காரணமாக தேர்தல் பெறுபேறுகளை ஊடகங்களுக்கு முதலில் வழங்க வேண்டிய கடப்பாடு எமக்கு இருந்தது.

எனினும், உள்ளூராட்சி மன்றங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட போது வட்டாரங்கள் விடுபட்டும், தபால் வாக்குகள் கணக்கில் சேர்க்கப்படாமலும் பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றதால் தேர்தல் பெறுபேறுகளை திருத்தி வெளியிட தாமதம் ஏற்பட்டது.

இதுவரை காலமும் கொழும்பு பல்கலைக்கழக கணணிப் பிரிவினரே தேர்தல் பெறுபேறுகளை வெளியிடும் செயற்பாடுகளில் ஒத்தாசையாக இருந்தனர்.

அவர்கள் அனுபவமிக்கவர்கள். ஆனால் அவர்களில் பலர் ஓய்வில் சென்றுள்ளதாலும், உயிரிழந்துள்ளதாலும் இம்முறை களனிப் பல்கலைக்கழக கணணிப் பிரிவு ஒத்தாசை செய்தது. அவர்களின் அனுபவமின்மையும் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடுவதில் சற்று தாமதத்தை ஏற்படுத்தியிருந்ததாக கூறியுள்ளார்.

இதேவேளை, பெறுபேறுகளை திரித்து வெளியிடும் முயற்சி பற்றிய தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பெறுபேறுகள் முழுமையாக வெளியிடும் வரை தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இதற்குச் சான்று கூறுவார்கள் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts: