தேர்தல் செலவு மேலும் பாதிப்புக்கு உட்படுத்தும் – அரச நிதி நிலைமை தொடர்பில் நிதி அமைச்சு சுட்டிக்காட்டு!

Friday, January 20th, 2023

2023 ஆம் ஆண்டில் நிதி நிலைமை ஆட்சியாளர்களின் கையை விட்டு விலகிச் செல்லும் தன்மை காணப்படுவதால் அதை தடுப்பதற்காக அரச செலவை கட்டுப்படுத்துவது மிக மிக முக்கியம்.

அதன்படி அரச நிதி விடயத்தை பார்க்கும் போது தேர்தல் செலவு அரச நிதி நிலைமையை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதோடு தேர்தலுக்காக வளங்களைப் பெற்றுக் கொள்வது திறைசேரிக்கு மிகவும் மோசமான சவால் மிகுந்த விடயமாகுமென நிதிஅமைச்சு தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி, தேசிய பணம் பெறும் வழிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதால் அரச நிதி முகாமைத்துவம் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

திறைசேரிக்கு வருமானமாக 147 பில்லியன் ரூபாய் கிடைத்துள்ளது. அதில் 88 பில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துவதற்கும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் சமூர்த்தி கொடுப்பனவுகளுக்கு 30 பில்லியனும் உரத்தைப் பெற்றுக் கொள்ள 6.5 பில்லியனும் சுகாதார அமைச்சுக்கு அத்தியாவசியமான மருந்து வகைகளுக்காக 8.7 பில்லியனும் ஏனைய செலவுகளை உள்ளடக்கி 154 பில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

திறைசேரியின் வருமானம் 147 பில்லியன் ஆக இருந்தபோதும் செலவு 154 பில்லியன் என்றால் அந் நிலைமையை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்ற கேள்வி எழும். இந்த நிதி வெளிநாட்டு கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு செலவிடப்பட்ட தொகையை உள்ளடக்காமலேயே கணக்கிடப்பட்டுள்ளது.அதற்காக டிசம்பர் மாதத்தில் 182 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

மேலும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் 2000ஆம் ஆண்டு 152 பில்லியன், 2005ஆம் ஆண்டு 185 பில்லியன், 2010ஆம் ஆண்டு 478 பில்லியன் என அதிகரித்துள்ளது.

இந் நிலைமையில் செலவுகள் குறித்து கவனம் செலுத்தும் போது அவதானத்துடன் செயல்படவேண்டும்.

சிறு தவறு ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களே என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: