தேர்தலை பிற்போடுவது ஜனநாயகக் கொள்கைக்கு முரணானது – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டு!

Wednesday, February 15th, 2023

தேர்தலை பிற்போடுவது ஜனநாயக கொள்கைக்கு முரணானது. தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப்பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை (14) தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்ததாக குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.

ராஜபக்ஷர்கள் உரிய காலத்திற்கு முன்னர் தேர்தல்களை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே தவிர தேர்தலை பிற்போட்டார்கள் என்ற குற்றச்சாட்டு ஏதும் கிடையாது.

தேர்தலை பிற்போடுவது ஜனநாயக கொள்கைக்கு முரணானது. தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த கட்சி என்ற ரீதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளோம். நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: