சர்வதேச எல்லை விவகாரம் என்பதால் மீனவர்கள் பிரச்சினைக்கு நீதிமன்றத்தால் நிரந்தர தீர்வை இறுதி செய்ய முடியாது – புதுடெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Sunday, November 6th, 2022

மீனவர் பிரச்சினையானது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச எல்லை விவகாரம் என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட்டு நிரந்தர தீர்வை இறுதி செய்யும் முடிவை எடுக்க முடியாது என புதுடெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்த விடயம் தொடர்பில், நீதிப்பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 68 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் குடிமக்களைப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும் என்பதால், இந்த விடயம் தொடர்பில் இந்திய அரசுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய மத்திய அரசின் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் கே.எம். நட்ராஜ், குறித்த மனுவில் கூறப்பட்டிருந்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க இயன்றவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம், இது, இரு நாடுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச எல்லை சம்மதப்பட்ட விடயமாகும் என தெரிவித்துள்ளது.

இதில் நீதிமன்றம் தலையிட்டு நிரந்தர தீர்வை இறுதி செய்யும் முடிவை எடுக்க முடியாது என்பதால், குறித்த மனு முடிவுறுத்தப்படுவதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: