தேர்தலை தாமதப்படுத்தும் அவசியம் இல்லை – அமைச்சர் பைசர் முஸ்தபா!

Thursday, April 6th, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்த எனக்கு எந்தவிதமான அவசியமும் இல்லை. திருத்தப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை வர்தமானியில் பிரசுரிக்குமாறு அரசாங்க அச்சகத்துக்கு கையளித்துவிட்டேன்” என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், நடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் ஒரு வாரத்தில் வரத்தமானி அறிவித்தல் வெளியிடுவதாக நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை அமைச்சர் பைசர் முஸ்தபா, நிறைவேற்றவில்லை என, டளஸ் அழகபெரும எம்.பி குற்றஞ்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், நான் அதனை தாமதப்படுத்தவில்லை. தேர்தலை தாமதப்படுத்த எனக்கு எந்த அவசியமும் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே நான் செயற்படுகின்றேன். ஆணைக்குழுவின் திருத்தப்பட்ட அறிக்கையை அரசாங்க அச்சகத்துக்கு நான் ஒப்படைத்துவிட்டேன். முறையான நடவடிக்கைகளையே நான் முன்னெடுத்து வருகின்றேன்.

திருத்தப்பட்ட இந்த எல்லை நிர்ணய அறிக்கையை இன்னும் ஒரு வாரத்தில் வர்த்தமானியில் வெளியிடமுடியும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். இந்த விடயத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்” என்றார்.

Related posts: