தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள இரண்டாது தொகுதி ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை!

Sunday, March 21st, 2021

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள இரண்டாது தொகுதி ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி இதுதொடர்பாக தெரிவிக்கையில், கடந்த பெப்ரவரி மாதம் 14,15ஆம் திகதிகளில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் கொடுக்காதவர்களின் வெற்றிடத்திற்கு இஸட் மதிப்பெண் அடிப்படையில் முதல் நிலையில் உள்ளவர்கள் அழைக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கமைய இஸ்லாம் கற்கை நெறிக்கு 30 பேரும், கணிதம் கற்கை நெறிக்கு 49 பேரும், வணிகக் கல்விக்கு 20 பேருமாக மொத்தம் 99 பயிலுனர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், இவர்களுக்கான கடிதங்கள் தனித்தனியாக விண்ணப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சகல ஆவணங்களுடனும் காலை 09.00 மணிக்கு சமூகமளிக்குமாறும் கேட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்குமைய கல்வியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தேசியக் கல்வியக் கல்லூரிக்கு விஞ்ஞானம் கற்கை நெறிக்கு 20 பயிலுனர்களும், கணித கற்கை நெறிக்கு 20 பயிலுனர்களும், இஸ்லாம் கற்கை நெறிக்கு 30 பயிலுனர்களும், ஆரம்பநெறி கற்கை நெறிக்கு 90 பயிலுனர்களும், விசேட கற்கை நெறிகளுக்கு 15 பயிலுனர்களும், வணிகக் கல்விக்கு 20 பயிலுனர்களுமாக மொத்தம் 195 பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

Related posts: