தென்னிலங்கை மீனவர்களுக்கு உள்ளூர் மீனவர்கள் ஒத்துழைப்பு  – குற்றம் சாட்டும் அதிகாரிகள்!

Friday, June 1st, 2018

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் வந்து தங்கியிருந்து தொழில் செய்வதற்கு திணைக்களங்கள் எந்த அனுமதியையும் வழங்கவில்லை. சில உள்ளூர்வாசிகளே தமது பகுதிகளில் தென்னிலங்கை மீனவர்கள் வந்து தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மற்றும் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் பெருமளவில் வந்து தங்கியிருந்து கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தென்னிலங்கை மீனவர்கள் வந்து தங்கியிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திணைக்களங்கள் அனுமதி வழங்கியுள்ளதா என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோதே, அதிகாரிகள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

2016ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எந்த அனுமதியும் வழங்குவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த தீர்மானம் கடந்த மாதம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், இதனையும் மீறி வெளிமாவட்டங்களிலிருந்து வந்து தங்கியிருந்து சிலர் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். பொலிஸாரின் உதவியுடன் அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சில நாள்களுக்கு முன்னர், அந்த வாடிகள் அமைந்துள்ள பிரதேசங்களில் துண்டறிக்கைகள் ஒட்டினோம். கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மீண்டும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலட்டை பிடிப்பதற்கு கொழும்பு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் தங்கியிருந்து தொழில் செய்வதற்கு உள்ளூர்வாசிகள் சிலரே உதவுகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வடமராட்சி கிழக்கில் உள்ள கடற்தொழில் சமாசங்கள் இந்த விவகாரம் தொடர்பில் இன்று கூடி ஆராயவுள்ளன. இந்தப் பிரச்சினைக்காக விரைவில் அவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: