துப்பாக்கியை அபகரித்தவர்களால் வன்முறைகள் மோசமாக வாய்ப்பு – அவதானமாக இருக்குமாறு மக்களிடம் பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்து!

Friday, July 15th, 2022

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் (13) புதன்கிழமை இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினர் இருவர் ஆர்ப்பாட்டக்காரர்களால் பாரதூரமாக தாக்கப்பட்டு, அவர்களிடமிருந்த T56 ரக துப்பாக்கி அபகரிக்கப்பட்டுள்ளது.

அந்த துப்பாக்கியைக் கைப்பற்றியவர்கள் அதனைக் கொண்டு வன்முறைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்படக் கூடும் என்பதால் பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் குறிப்பிடுகையில்,

புதன்கிழமை பத்தரமுல்ல, நாடாளுமன்ற சுற்றுவட்டாரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வன்முறையாக செயற்பட்ட தரப்பினரால் பாதுகாப்பு தரப்பினருடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னோக்கிச் சென்ற பாதுகாப்பு தரப்பினர் இருவர் மீது மிகவும் பாரதூரமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் இரும்பு கம்பிகளாலும், பொல்லாலும் முகம் மற்றும் தலைப்பகுதியில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் தாக்குதல்களை மேற்கொண்டதன் பின்னர் அவர்களிடமிருந்த ரி 56 ரக இரு துப்பாக்கிகளையும், அவற்றுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளையும் அபகரித்துள்ளனர்.

இவ்வாறு முகம் மற்றும் தலைப்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் கவலைக்கிடமான முறையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டு அந்த தரப்பினர் வன்முறையை மேலும் பரப்பும் வகையில் செயற்படக் கூடும்.

எனவே பொது மக்களை இது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: