தீவகப்பகுதி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி !

Thursday, May 3rd, 2018

தீவக பகுதியின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தீவகம் தெற்கு வேலணை மற்றும் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களின் பிரதிநிதிகள் சாட்டி பகுதி மக்களுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

வேலணை – மண்கும்பான் பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நடைபெற்ற குறித்த விஷேட கலந்துரையாடல் வேலணை பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது.

இன்றையதினம் வேலணை பிரதேச சபை தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி, வேலணை பிரதேசசபை செயலாளர், நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை அதிகாரிகள், ஊர்காவற்றுறை பிரதேசபை மற்றும் பிரதேசசெயலக அதிகாரிகள், சாட்டி மாதா ஆலய பங்குத்தந்தை மற்றும் வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர்  சாட்டி மண்கும்பான் பகுதிக்கு சென்று குடிநீர் கிணறுகளை பார்வையிட்டதுடன் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மண்கும்பான் பகுதி மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வேலணை பிரதேச சபை தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி –

நீண்டகாலமாக தீவகப்பகுதியில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டியது அவசியமானது. கடந்தகாலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தபோது இங்கு காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு முடியுமானளவு தீர்வு காணப்பட்டதுடன் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் அவரது முயற்சியின் காரணமாகவே இன்று வேலணை பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு குழாய் வழிமூலமாக குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

குடிநீரை பாதுகாத்து மக்களுக்கு வழங்குவது எமது கடமையாகும். அந்தவகையில் எமது பிரதேச மக்களது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக சாட்டிப் பகுதியில் காணப்படும் அனைத்து கிணறுகளையும் சுத்தம்செய்து அவற்றுக்கு நிரந்தர நீர் பம்பி குழாய்கள் அமைப்பதுடன் அந்தக் கிணறுகளுக்கு பாதுகாப்பு வேலியும் அமைத்து குடிநீரை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இதன்போது முதல் கட்டமாக நீர்ப்பாசன திணைக்களம் மூலம் வழங்கப்படும் நீரை கட்டுப்படுத்தல் (அதாவது தற்போது வழங்கப்படும் நீரினை அரைவாசியாக குறைத்தல் என்றும்-

தண்ணீர் தாங்கி மூலம் குடிநீர் எடுப்பவர்கள் இரவு வேளைகளில் எடுக்க முடியாது என்றும் –

15நாட்களுக்கு பின்னர் தனியார் தண்ணீர் தாங்கிகளை மட்டுப்படுத்தல் என்றும் –

அனைத்து கிணறுகளுக்கும் பாதுகாப்பு வேலி அமைத்து நிரந்தர நீர்ப்பம்பி குழாய் பொருத்துதல் என்றும் வேலணை பிரதேசசெயலர் சில தீர்மானங்ளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பல்கலைக்கழகங்கள் மீளத் திறப்பது மீண்டும் ஒத்திவைப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
கடல் மார்க்கமாக இலங்கையில் கொரோனா பரவும் அபாயம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்...
இலங்கையில் அடுத்த 18 மாதங்களுக்குள் கேபிள் கார் சேவை - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெ...