தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணிகள் முன்னெடுப்பு!

Thursday, July 1st, 2021

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதை தொடர்ந்து நாட்டின் கடற்பரப்பில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலினூடாக ஆழ்கடல் பகுதியை ஸ்கான் செய்து, எஞ்சிய பாகங்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

இந்த தேடுதல் நடவடிக்கை நாளை இரண்டாம் திகதி நிறைவுசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் ஆழ்கடல் பகுதியில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை அகற்றுமாறு கப்பல் நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதுவரையில் கப்பல் மூழ்கியுள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மீன்பிடிப் படகுகள் உள்ளிட்ட உடைமைகளுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த தடையை விரைவில் நீக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை மற்றும் களுத்துறை கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கடந்த மே மாதம் 22 ஆம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: