திருகோணஸ்வரத்தை தரிசித்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – திருமலையில் State bank of india வின் புதிய கிளையையும் திறந்துவைத்தார்.!

Thursday, November 2nd, 2023

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருகோணஸ்வரம் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபுட்டார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளிலேயே இந்திய நிதி அமைச்சர் கலந்துகொண்டார்.

இதேவேளை, திருகோணமலையில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களையும் இந்திய நிதி அமைச்சர் பார்வையிட்டதுடன், திருகோணமலையில் உள்ள ஐ.ஓ.சி தலைமையகத்துக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார்.

திருகோணமலையில் State bank of india புதிய கிளை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்காக passbook நிர்மலா சீதாராமனால் செந்தில் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது

முன்பதாக நேற்றையதினம் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டியில் தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

மல்வத்து பிரிவின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்ற நிர்மலா சீதாராமன், இலங்கை மக்களுக்காக இந்தியப் பிரதமர் மூலம் வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் இந்திய மக்களுடன் இலங்கை கொண்டுள்ள வலுவான தொடர்பையும் வலியுறுத்தினார்.

இந்தியாவுடனான ஆழமான கலாசார உறவுகளை திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் இதன்போது நினைவுக்கூர்ந்ததுடன், இந்த உறவுகள் மேலும் வலுவடைய வேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய பொருளாதார உதவிகளுக்கு நன்றி தெரிவித்த மகாநாயக்க தேரர், இலங்கையின் நம்பிக்கைக்குரிய நண்பன் என்ற வகையில், பொருளாதார நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கு முதலில் கைகோர்த்தது இந்தியாவே எனவும் குறிப்பிட்டார்.

இந்திய நிதியமைச்சர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரையும் சந்தித்து ஆசி பெற்றார்.

இலங்கையின் மத வழிபாட்டுத் தலங்களின் சூரிய மின்மயமாக்கல் திட்டத்தை மானிய அடிப்படையில் இந்தியா முன்னெடுக்க உள்ளமை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்கு இந்திய நிதி அமைச்சர் இந்தச் சந்திப்புக்களில் தெளிவுப்படுத்தினார்.

இதற்கான ஒப்பந்தம் நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் இந்திய நிதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: