தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, April 19th, 2022

சமூகத்தின் மிகவும் சுறுசுறுப்பான பகுதியினரான இளைஞர்கள் தங்கள் அழுத்தத்தை அவர்களுக்கே உரிய வழியில் வெளியிடுவதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யவும், போராட்டங்களை நடத்தவும் இன்று முழு சுதந்திரம் பெற்றுள்ளனர்.

அவர்கள் தமது போராட்டங்களை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்லும் போது, ஒழுக்கத்துடன் கடமையாற்றும் பொலிஸார், முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை குறிப்பாக நான் பாராட்டுகின்றேன்.

அமைச்சரவை நியமனத்தின் பின்னர் நிகழ்த்திய விசேட உரையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேரும் கூறுகையில் –

கடந்த இரண்டரை ஆண்டுகளில், நான் போராட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு, ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்து இருந்தேன். சுதந்திரம் வழங்கியுள்ளேன். என் அலுவலகத்திற்கு அருகில் வந்த போராட்டக்காரர்களை கலைக்கக்கூட நான் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த எதிர்ப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் நாட்டை உண்மையாக நேசிக்கும் இளைஞர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் நாட்டுக்காக முன்வருவதை எதிர்காலத்திற்கான சாதகமான அடையாளமாகவும் பார்க்கிறேன்.

இனம், மதம், அரசியல் வேறுபாடின்றி நாட்டை நேசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போதைய ஆட்சியின் தவறுகளை திருத்தி நாட்டைக் கட்டியெழுப்பவே விரும்புகின்றார்கள், நாட்டைத் தோல்வி அடையச் செய்வதற்கு அல்ல என்று நான் நம்புகிறேன். எனவே, உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை வன்முறைப் பாதையில் திசை திருப்ப சந்தர்ப்பவாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று இந்த இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய மகாசங்கத்தினர், மதகுருமார்கள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அந்த ஆலோசனைகள் அனைத்தையும் நான் உணர்வுபூர்வமாகக் கேட்கிறேன்.

அறுபத்து ஒன்பது இலட்சம் மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி மிகுந்த நம்பிக்கையுடன் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தனர். எனது பதவிக்காலத்தில் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளேன். அதன்படி, தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்.

இந்த நாட்டு மக்களின் பணத்தை நான் திருடியதில்லை. அன்றும் இன்றும் என் கைகள் சுத்தமாகவே உள்ளன. நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது பலரது கோரிக்கைகளுக்காகவே அன்றி அதிகார தேவைக்காக அல்ல. எனது வாழ்நாளில் முப்படையில் அதிகாரியாக 20 ஆண்டுகள் இந்த நாட்டிற்கு சேவை செய்துள்ளேன். நான் வெற்றிகரமாக சேவை செய்துள்ளேன். அத்துடன், பாதுகாப்புச் செயலாளராக நான் இந்த நாட்டுக்கு வெற்றிகரமாக சேவையாற்றியுள்ளேன். நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியுள்ளேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்ற முறையில், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் நான் எப்போதும் செயற்படுகின்றேன்.

நாட்டின் சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. எனவே, அரசியலமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களை பாராளுமன்றத்தில் கலந்துரையாடி தேவையான மாற்றங்களை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அவசியமான ஒத்துழைப்பை எந்த நேரத்திலும் பாராளுமன்றத்திற்கு வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன்.

அதற்கிணங்க, நாட்டின் அதியுயர் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து, எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து, இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதாக நான் உறுதியளிக்கிறேன், மேலும் இது தொடர்பாக மக்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்துகிறேன். மேலும் மக்கள் எதிர்பார்ப்பது போல் நேர்மையாகவும், திறமையாகவும், தூய்மையாகவும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: