தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் – கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, August 3rd, 2022

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் என அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இன்று காலை 10.30 மணிக்கு ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மூன்றாவது கூட்டத்தொடருக்கு தலைமை தாங்கினார். இதன்போது  செயலாளர் நாயகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டமை மற்றும் நாடாளுமன்றத்தை கூட்டுதல் பற்றிய பிரகடனத்தை சபைக்கு வாசித்தார்.

இதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை ஆற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி – நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் நன்றி தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்வதே நெருக்கடிகளை தீர்ப்பதற்கான சிறந்த வழிமுறையாகும் என குறிப்பிட்டார்.

அமைதியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். நான் அதனை பாதுகாப்பேன். எனினும் வன்முறைகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் இடமளிக்க முடியாது. அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக என்னால் எவ்வித பழிவாங்கல்களும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள பல முக்கிய விடயங்களை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாராளுமன்றத்தில் அனைவரது இணக்கப்பாட்டையும் எதிர்பார்க்கின்றேன் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இலங்கையை கட்டியெழுப்ப நீண்ட கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் நாம் செய்ய இருக்கும் காரியங்களை இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் அறிவிப்போம்.

IMF உதவிகளை பெற்று இம்மாதம் முடிவதற்கு முதல் உதவிகளை பெற்றுகொள்வோம். இலங்கையின் வரலாற்றின் படி மீண்டும் அனைத்து நாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதியாளராக நாம் மாறுவோம். பொருளாதார பிரச்சினைகளினால் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளன.

ரூபாவின் பெறுமதியும் விழுந்துள்ளது. இதேவேளை சுற்றுலாப்பயணிகள் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருவார்கள். மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படுவதுடன், அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும்.

முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அந்த திட்டத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அன்று அந்த அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றிருக்குமானால் இன்று எரிபொருள் வரிசைகள் இருந்திருக்காது.

மேலும், சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளை ஆரம்பிக்கும் போதும் அப்போதைய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை இட்டன. இதனூடாக பல மரணங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டனர். ஆனால் நாங்கள் அதை தைரியமாக முன்னெடுத்தோம். அதனூடாக இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

அத்துடன் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இளைஞர்களின் ஆதரவோடு இணைந்து செயல்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, இதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இலஞ்சத்தை சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பதவி காலத்திற்குள் இது போன்ற அனைத்து அரசியல் மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அனைவரையும் இணைத்து அரசியலில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படுவதுடன், அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே, நல்ல திட்டங்கள் முன்னெடுக்கும் போது அவற்றை வரவேற்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.“ எனக் குறிப்பிட்டார்

முன்பதாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று காலை வைபவ ரீதியாக ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிகழ்வுக்கான இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு முதலாவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் வருகையும், அதனைத் தொடர்ந்தும் பிரதமர் தினேஸ் குணவர்தனின் பிரசன்னமும் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்தும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரின் வருகை இடம்பெற்றது.

நாடாளுமன்றில் வழமைக்கு மாறாக, ஜனாதிபதியின் இலட்சினை கொடிக்கு பதிலான தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகையின் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், ஜனாதிபதிக்கு முப்படையினரின் கௌரவம் அளிக்கப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அழைத்து செல்லப்பட்டதுடன், கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய மாணவிகளால் ஜயமங்கல கீதம் இசைக்கப்பட்டு ஆசி வேண்டப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்ற அங்கி அறைக்கு ஜனாதிபதி அழைத்துசெல்லப்பட்டார்.

இந்நிலையில், காலை 10.25 க்கு கோர மணி ஒலிக்க ஆரம்பித்தது, அதன்பின்னராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்க, சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி சபா மண்டபத்துக்குள் பிரவேசித்தனர்.

அதனை தொடர்ந்து, 10.30 க்கு சபை நடைநடிக்கைகள் ஆரம்பமானதுடன் ஜனாதிபதி அக்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: