தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி பிரதமர் ஆராய்வு – விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, May 18th, 2020

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர்களது பெயர் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை கடந்தவாரம் ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்திருந்தனர்.

இதன்போது இவ்விடயம் தொடர்பில் விரைவில் அவதானம் செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவிக்கையில் – அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய முடியாது. எனினும், ஒரு பகுதியினரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ஆராய்ந்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பாரிய குற்றங்களை இழைத்த தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைகளை அனுபவித்தே தீர வேண்டும் ஆனாலும் பல வருடங்கள் தண்டனைகளை அனுபவித்துவரும் அத்தகைய கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதா? இல்லையா? என்பதை ஜனாதிபதி தீர்மானிப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்கும் பரிகாரம் காணப்படுவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட குழுவினரால் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: