ஆசன எண்ணிக்கைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Saturday, October 29th, 2022

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக, பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, போக்குவரத்து அமைச்சு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், பேருந்து கட்டணங்கள் 10 வீதத்தால் குறைக்கப்பட்டது. இதையடுத்து, டீசல் லீற்றரின் விலை, 15 ரூபாவினால் குறைக்கப்பட்டது.

இதன்போது, கருத்து வெளியிட்டிருந்த போக்குரவத்து அமைச்சர், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், கட்டணத்தைக் குறைப்பதாக தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, குறித்த சட்டத்தை நீக்குமாறு, நான்கு சந்தர்ப்பங்களில் போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சிற்கு எழுத்துமூலம் அறியப்படுத்தி இருந்தது.

இதற்கமைய, நடவடிக்கை எடுத்தால், 12 வீதத்தால், பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைவான தீர்மானத்தை விரைவாக எடுப்பதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், 34 ரூபாவாகவுள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 29 ரூபாவாக குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: