தப்பி ஓடிய  இராணுவச் சிப்பாய்களுக்கு சட்ட நடவடிக்கை!

Sunday, July 24th, 2016

படைகளில் இருந்து தப்பிஓடிய 18,847 பேர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

முப்படைகளில் இருந்தும் தப்பிஓடியவர்கள், முறைப்படி விலகிக் கொள்வதற்கான பொதுமன்னிப்புக் காலமாக கடந்த ஜூன் 13ஆம் நாள் தொடக்கம், ஜூலை 13ஆம் நாள் வரை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தில், இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 16,920 பேரும், கடற்படையில் இருந்து தப்பி ஓடிய 831 பேரும், விமானப்படையில் இருந்து தப்பிச்சென்ற 629 பேரும், தாமாக விலகிக் கொள்ள முன்வந்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

இந்தப் பொது மன்னிப்புக்காலத்தை கடற்படையில் இருந்து தப்பியோடிய 7000 பேரில், 6169 பேர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, 2009 தொடக்கம் 2014 வரையான காலத்தில், 4,717 விமானப்படையினரும், 2015இல் 515 விமானப்படையினரும் தப்பியோடியதாக சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார்.இவர்களில் 629 பேர் மாத்திரமே, பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் தப்பியோடிய படையினருக்கு இனிமேல் பொது மன்னிப்பு வழங்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை காவல்துறை, முப்படைகளினதும் இராணுவ காவல்துறை என்பன, தப்பியோடிய படையினரைத் தேடும் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.இதன்போது பிடிபடுபவர்களுக்கு எதிராக இராணுவச் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

Related posts: