தனியார் வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு கண்காணிக்கும் பெப் 4 முதல் புதிய நடவடிக்கை!

Wednesday, January 31st, 2018

தனியார் வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை முறைகள் மற்றும் அவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளுக்காகவும் அறவிடப்படும் கட்டணங்கள் ஆகியன பற்றிய கண்காணிப்பு நடவடிக்கையை சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள தகவலில் தனியார் வைத்தியசாலைகளில் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை பற்றிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி 4 ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து அமைச்சின் விசேட மருத்துவ கண்காணிப்பு அதிகாரிகள் முதற் கட்டமாக பிரபல தனியார் வைத்தியசாலைகளில் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களெனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் உத்தேச மருத்துவ கண்காணிப்பு முக்கியமாக இருதய சத்திரசிகிச்சை போன்ற பாரிய சத்திர சிகிச்சைகள் சம்பந்தமாகவே மேற்கொள்ளப்படும் எனவும் தனியார் வைத்தியசாலைகளில் இவ்வாறான சத்திர சிகிச்சைகள் மேற்கொண்டவர்கள் தரப்பிலிருந்து சிகிச்சை முறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றி அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்களைத் தொடர்ந்தே அவற்றைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறான முறைப்பாடுகளிலிருந்து தெரியவந்துள்ள தகவலில் குறிப்பிட்டதொரு தனியார் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்காக 7 இலட்சம் ரூபா கட்டணமாக செலுத்துமாறு முதலில் நோயாளி தரப்புக்கு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் சத்திர சிகிச்சை முடிந்த பின்னர் சிகிச்சை கட்டணமாக 12 இலட்சம் ரூபா கோரப்பட்டதாகவும் குறித்த நோயாளி சுகமடையாததால் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 18 இலட்சம் ரூபா கோரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கு முழுமையான ஆதரவையும் நிவாரணத்தையும் சுகாதார அமைச்சு வழங்குமெனவும் இவ்வாறு தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே மேற்படி கண்காணிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: