தனியார் பேருந்துகளில் அமுலுக்கு வரும் வகையில் புதிய சட்டம்!

Friday, March 29th, 2019

ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்தது.

இதற்கமைய தனியார் பேருந்துகள் அனைத்தும் தனி நீல வர்ணப்பூச்சு உடையதாக இருக்க வேண்டும். அத்தோடு தனியார் பேருந்துகளில் காணப்படும் ஸ்டிக்கர்கள், வர்ணப்பூச்சு, ஒலி அமைப்புகள், ஏனைய ஒலிச் சாதனங்கள் ஆகியவை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும்.

இதற்காக எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இரு மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இக்கால அவகாசத்தினுள் மேற்கூறப்பட்ட விடயங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் காணப்படும் பல வண்ணமயமான வர்ணப்பூச்சுக்களினாலும், வண்ணமயமான ஸ்டிக்கர்களினாலும், ஏனைய பஸ் சாரதிகள் கவனச் சிதறலுக்கு உள்ளாகுவதால், பல்வேறு விபத்துகளும் சம்பவித்துள்ளன.

தனியார் பஸ்கள் தனித்துவமான நீல வர்ணத்தில் காணப்படும் பட்சத்தில் பயணிகளுக்கு அடையாளம் காண இலகுவாக இருக்கும் என்பதோடு, நீல வர்ணம் கண்களுக்குச் சாந்தமாக இருக்கும்.

இதன் காரணமாக வீதி விபத்துகளை ஓரளவுக்கேனும் குறைக்க முடியும் என்பதால், நீல வர்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்தது.

மேலும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விடயங்களைத் தவிர்ந்த, ஏனைய அனைத்துப் பொருட்களையும் நீக்குவதற்காகச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

Related posts: