தணிக்கைகள் மூலமாக அல்ல, மேற்பார்வை மூலமே கௌரவமான ஊடக கலாசாரத்தை உருவாக்க முடியும் – ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Monday, February 7th, 2022

கௌரவமான ஊடக கலாசாரத்திற்கு தணிக்கைகள் மூலமாக அன்றி முறையான மேற்பார்வையே அவசியமானது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்

அத்துடன் மக்களின் கருத்தை கையாளும் ஊடகங்களின் பலம் அரசியல் நிறுவனங்களின் பலத்தை விட மிக அதிகம் எனவும், அந்த பெரும் பலத்துடன் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பும் இருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போதைய ஊடகங்களை அர்த்தமுள்ள, தரமான மற்றும் ஒழுக்கமான திசையை நோக்கி செலுத்துவதற்கு, சில சட்ட சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்காக விரிவான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். சுய ஒழுங்குமுறையே சிறந்த நடவடிக்கை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஊடக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஊடக சட்ட மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.  அதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்…   

“ஊடகத்திற்கு வரலாற்றில் நம்பகத்தன்மையும் மரியாதையும் அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் அந்த நற்பெயரும் நம்பகத்தன்மையும் இன்று அந்த நம்பகத்தன்மை இருகிறதா? அதில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

ஊடகத்துறையில் நமது நம்பகத்தன்மை ஐந்து முக்கிய புள்ளிகளின் கீழ் களங்கம் அடைந்துள்ளது என்று நான் நம்புகிறேன்.

ஒன்று முதலாளியின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகும். அரச ஊடகங்களுக்கு அரசு தான் முதலாளி. இரண்டாவது தீவிர அரசியல் மயமாக்கல், அதை நாம் அனுபவிக்கிறோம். இது தவிர தனியுரிமை எல்லைகள் மிகத் தீவிரமான முறையில் மீறப்படுகின்றது. 

அடுத்தது, தகவல் சார்ந்ததாக அன்றி மனப்பாங்கின் அடிப்படையிலான போலிச் செய்திகளால் மக்கள் ஏமாறுகிறார்கள். மேலும் தேசியம் மற்றும் மதம் சார்ந்த வெறுப்புப் பேச்சுகளை அடிக்கடி காணுகிறோம்.

.இதில் இருந்து விடுபடுவது எப்படி? இதற்கு தணிக்கைதான் சரியான தீர்வு என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அது சரியான தீர்வல்ல என ஊடகத்துறை அமைச்சராகிய நான் நம்புகிறேன். நான் அதை நிராகரிக்கிறேன். ஆனால் எங்களுக்கு ஒருவித மேற்பார்வை அவசியமானது. அதை யாரும் நிராகரிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். 

அத்துடன் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக கல்வி முறைகளில் ஊடகம் என்ற பாடத்தை நடைமுறைச்சாத்தியமான பாடமாக மாற்றுவது அவசியமாகும். இதற்கு முப்பரிமாண அணுகுமுறையை முன்வைக்க விரும்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts: