தகவல் அறியும் சட்டத்தால் கோரும் தகவல்களை மறைக்காது வழங்குக! யாழ்ப்பாண மாவட்டச் செயலர்!

Tuesday, September 25th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல திணைக்களங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகத் தகவல்கள் கோரப்படும் போது அவற்றை வழங்க சில அதிகாரிகள் பின்னடிக்கும் நிலைமை காணப்படுகின்றது என்று தெரிவித்தார் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன்.

பன்னாட்டு தகவல் அறியும் உரிமைத் தினத்தை முன்னிட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிராமத்துக்கான தகவல் உரிமை எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று யாழப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவட்டச் செயலர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்ததாவது:

அரசின் அனைத்து விடயங்களையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. அனைத்து அதிகாரிகளும் எந்த ஒழிவு மறைவும் இன்றி வழங்கக் கூடிய அனைத்துத் தகவல்களையும் வழங்க வேண்டும். இந்தச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் என்பதற்காகவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டத்தின் மூலம் உண்மையான விபரங்களை பெற்றுக்கொள்ளுதல், ஊழலைத் தடுத்தல், காணி தொடர்பாக விபரங்களைப் பெற்றுக்கொள்ளல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் இறந்தவர்களின் விபரங்களைப் சமூக மட்டத்தில் உள்ளிடுதல் மற்றும் சகலரும் பெற்றுக்கொள்ளல் ஆகிய அம்சங்களைக் கொண்டு நடமாடும் சேவை நடத்தப்பட்டது. அதில் கிராம மட்டப் பொதுமக்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் , இளையோர் எனப் பலர் அதில் கலந்து கொண்டனர்.

அரச தகவல் திணைக்களத்தின் இயக்குநர் சுதர்சன குணவர்த்தன, நிதி மற்றும் ஊடக அமைச்சின் பிரதிச் செயலாளர் செல்வி சுதர்மா குணரட்ன, தேசிய ஊடக வலையமைப்பின் இயக்குநர் ஜெகத் லியனராட்சி ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts:

பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் -சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவ...
எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அன...
கிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் நான்கு மரணங்கள் பதிவு : 150 பேர் பாதிப்பு மாகாண சுகாதார சேவை...