டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமாகப் பேணுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமாகப் பேணுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மீண்டும் டொலரின் பெறுமதி அதிகரித்து வருகின்றமை தொடர்பில் நேற்றைய தினம் (29.08.2023) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தைகளில் நிலவும் கேள்விக்கு ஏற்ற விநியோகம் வழங்கப்படாத சந்தர்ப்பங்களிலும், இறக்குமதி தளர்வுகளின் போது அந்நிய செலாவணி விகிதங்களில் தளம்பல் நிலை ஏற்படக் கூடும்.

எவ்வாறிருப்பினும் டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமாகப் பேணுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு அமைய அந்நிய செலாவணி விகிதங்களை நேரடியாக தீர்மானிக்கும் செயற்பாடுகளிலிருந்து அரசாங்கம் விலகியுள்ளது.

எனவே சந்தையில் கேள்வி, விநியோகம் என்பவற்றுக்கமையவே அந்நிய செலாவணி விகிதங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

வெளிநாட்டு சந்தைகளில் காணப்படும் கேள்விக்கு ஏற்ற விநியோகம் வழங்கப்படாவிட்டால், உள்நாட்டு அந்நிய செலாவணி விகிதங்கள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் ஆரம்ப கட்டங்களில், குறுகிய காலத்துக்கு இவ்வாறான நிலைமை ஏற்படக்கூடும்.

எவ்வாறிருப்பினும் கேள்விக்கு ஏற்ற விநியோகத்தை வழங்கும் போது, இலங்கை ரூபாவின் பெறுமதியை ஸ்திரமான மட்டத்தில் பேண முடியும் என்று மத்திய வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் காணப்பட்ட நெருக்கடி நிலைமையிலிருந்து நாடு ஓரளவு மீட்கப்பட்டுள்ளது. பணவீக்கம் ஓரிலக்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான குறுகிய கால பிரச்சினைகள் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தாது எவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: