டெங்கு நோயின்  தாக்கம் குறைவடைந்துள்ளது!

Wednesday, July 4th, 2018

பிரதேச மக்களின் ஒத்துழைப்பு மற்றும் டெங்குக்கட்டுப்பாடு தொடர்பான சிறப்புப் பயிற்சி பெற்ற தொண்டர்களின் அர்ப்பணிப்பான சேவையினாலும் தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்குவின் தாக்கம் குறைவடைந்துள்ளது என சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதேசத்தில் டெங்குவின் தாக்கம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்குப் பிரதேச மக்கள் வழங்கிய முழுமையான ஒத்துழைப்பே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வருடம் முழுவதும் டெங்கினால் 685 பேர் பாதிக்கப்பட்டனர் இதில் முதல் ஆறு மாதங்களில் 424 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த வருடத்தில் முதல் ஆறு மாதத்தில் (ஜனவரி தொடக்கம் ஜீன் வரை) 114 பேரே பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவர்களில் மே மாதத்தில் தென்பகுதியில் பெய்த பெரு மழை வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு தங்கியிருந்த மாணவர்கள் தெரிழலுக்காகச் சென்றோர், சுற்றுலா சென்றோர் என டெங்கினால் பீடிக்கப்பட்டு 45 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த வருடம் தென்மராட்சிப் பிரதேசம் அதியுயர் டெங்குவின் தாக்கம் உள்ள பிரதேசமாக நடுவண் சுகாதாரத் திணைக்கள டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நடுவண் மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் தென்மராட்சிப் பிரதேச செயலகத்தினர் சாவகச்சேரி நகர சபையினர் போன்றோர் மேற்கொண்ட சிறப்பு டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பயனாக டெங்குவின் தாக்கம் குறைவடைந்திருந்தது. பொதுமக்கள் இவ்வாறான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவார்களாயின் நிச்சயம் டெங்குவின் தாக்கத்தை பிரதேசத்திலிருந்து முற்றாக இல்லாதொழிக்க முடியும் என்றார்.

டெங்குவின் தாக்கம் பிரதேசத்தில் குறைந்துள்ள போதிலும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களும் சுகாதாரத் தொண்டர்களும் தொடர்ச்சியாக கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்குப் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts: