ஜெனீவாவில் தெற்காசிய வலய நாடுகள் இலங்கைக்கு சார்பாகவே செயற்படும் – பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய நம்பிக்கை!

Sunday, February 20th, 2022

ஜெனிவா விவகாரத்தை வெற்றிகொள்ள அரசாங்கம் சிறந்த பொறிமுறையை வகுத்துள்ளது. வெளிவிவகாரக் கொள்கை பொதுவாக்கப்பட்டுள்ளதால் தெற்காசிய வலய நாடுகள் இலங்கைக்கு சார்பாக செயற்படும் என பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் குறித்து வினவிய போது மேற்கண்டாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இதுவரையில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு மாத்திரம் இலங்கையின் நடப்பு விவகாரங்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றன.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இலங்கைக்கு எதிராக செயற்படும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு சில காரணிகளை மாத்திரம் முன்னிலைப்படுத்திக் கொண்டு காலம்காலமாக விமர்சனங்களை மாத்திரம் முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நாட்டில் அரச செயலொழுங்கில் மூவின மக்களும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். யுத்தகாலத்தில் இடம்பெற்ற தனிமனிதக் குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சட்டத்தின் முன்னிலையில் அனைத்து தரப்பினரும் சமமாகவே மதிக்கப்படுகிறார்கள்.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து பரிசீலனை செய்வதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரை சிறந்த முறையில் வெற்றிகொள்ள அரசாங்கம் சிறந்த பொறிமுறையினை வகுத்துள்ளது. தெற்காசிய வலய நாடுகள் இலங்கைக்கு சார்பாகவே செயற்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: