ஜூலைமுதல் மின்கட்டணம் குறைப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைகள்!

Sunday, June 11th, 2023

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ள அளவு தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது

குறித்த யோசனைகளுக்கு அமைய 0 – 30 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோருக்கான மின் கட்டணம் 26.9 சதவீதத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 10.8 சதவீதமும், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 7.2 சதவீதமும் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் யோசனைக்கு அமைய, அதிகளவான மக்கள் பயன்படுத்தும் 91 முதல் 180 வரையான அலகுகளுக்கு 3.4 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

180 அலகுகளுக்கும் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கான கட்டணத்தை 1.3 சதவீதத்தால் குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், உத்தேச மின்கட்டண திருத்தத்துக்கு அமைய மதஸ்தானங்கள் மற்றும் வழிபாட்டு நிலையங்களுக்கான மின்கட்டணத்தை 3.2 சதவீதத்தால் குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொழிற்துறை, பொது அமைப்புகள், வீதி விளக்குகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உணவகத் தொழிற்துறைக்கான மின்கட்டணம் 12.6 சதவீதத்தால் குறைப்படும் என இலங்கை மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: