ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய்யி இடையே சந்திப்பு – இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன் நிலை தொடர்பில் ஆராய்வு!

Thursday, December 22nd, 2022

இலங்கையின் கடன் நிலை, இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன் தொடர்பில் சமீபத்திய காலமாக முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளை இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய் மதிப்பீடு செய்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய்யிற்கும் இடையிலான சந்திப்பு  கடந்த புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது சீன அரசாங்கம் மற்றும் சீன வங்கிகள் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சீனா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என சீன பதில் தூதுவர் இச்சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களின் பிரதிநிதிகளுக்கும். இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூன்றாம் சுற்று நிறைவு பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் தனித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறுகிய மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகள் எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் பொது பேச்சுவார்த்தையில் ஈடுபட சீனா இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: