செலவீனங்களை ஈடுகட்டவே 72% க்கும் அதிகமான ஒதுக்கீடு – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் 72% க்கும் அதிகமானவை இந்த ஆண்டு ஜனவரிமுதல் ஏற்பட்ட தொடர்ச்சியான செலவினங்களுக்கானவை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறாத நிலையில், ஆளுநர்களுக்கு பணிகளைத் தொடர வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும், ஜனவரி முதல் எந்த ஒதுக்கீடும் செய்யப்படாததால், தொடர்ச்சியாக செலவினங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலுக்கு அரசாங்கம் தயாரா என ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசாங்கம் இதுவரை தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது, நாட்டின் ஒன்பது மாகாணசபைகளும் அவற்றின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளமை காரணமாக செயற்படாமல் உள்ளது. குறிப்பாக தென்மாகாண சபையின் பதவிக் காலம் ஏப்ரல் 10 ஆம் திகதியும், மேல் மாகாணசபையின் பதவிக் காலம் ஏப்ரல் 21 ம் திகதியும் முடிவடைந்தது.
சப்ரகமுவ மாகாணசபையின் பதவிக் காலம் 2017 செப்டம்பர் 26 அன்றும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணசபையின் பதவிக் காலம் 2017 செப்டம்பர் 30 அன்றும் வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் 2017 ஒக்டோபர் முதலாம் திகதியும் முடிவடைந்தது
அதே நேரத்தில் மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணசபைகளின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் இல் முடிவடைந்த அதேநேரம் உவா மாகாண சபையின் பதவிக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இதேவேளை கடந்த வாரம் மாகாணசபை முறையையும் தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையையும் நீக்குமாறும் தேசிய கூட்டு அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் அரசாங்கதிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளமையினால் மாகாணசபை முறையை இரத்துச் செய்ய முடியும் என்றும் குறித்த அமைப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|