செயலில் அருகதையற்றோர் பேசிப் பேசியே காலத்தை வீணடிக்கின்றனர் – ஈ. பி. டி. பி.

Wednesday, June 1st, 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ விமர்சிக்க டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என அக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் பத்திரிகையாளர்களைக் கூட்டி ஒரு கூற்றை வெளியிட்டிருந்தார். இவரது கூற்றைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.

எமது மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்கும் வகையில் வெற்று உணர்ச்சிகளைத் தூண்டி, ஆட்சிப் பதவிகளைப் பிடித்திருக்கும் இன்றைய நிலையில்கூட, எமது மக்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற இயலாதிருக்கும் இவர் போன்றவர்கள் இப்படிக் கூறுவதுதான் வேடிக்கையான விடயமாகும். கிழக்கில் இதற்கு முன்பும் இவரைப்போல் இன்னொருவரும் இவ்வாறான வாய்ப்பேச்சுக்களில் மட்டும் தனது வீரத்தைக்காட்டி கடந்த தேர்தலின்போது மக்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை இவர் மறந்திருக்க மாட்டார் என நினைக்கின்றோம்.

எமது மக்களின் பிரச்சினைகளை இவர்கள் தீர்க்காமல் மக்களை தொடர்ந்தும் எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறார்கள் என்பதை நாளாந்தம் வெளிவருகின்ற தமிழ்ப் பத்திரிகைகளிலும், இணையத் தளங்கள் உட்பட சமூகத் தளங்களிலும் மக்கள் நன்கு உணர்ந்துவரும் நிலையில் இவர் இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பதுடன், டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்து என்ன வேலைத்திட்டத்தினை செய்திருக்கிறார்? என்றொரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.

எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதுவரையில் எமது பகுதிகளினதும், எமது மக்களினதும் நலன் கருதி செய்துள்ள சேவைகளைப் பட்டியலிட்டால் இவரது ஆயுட்காலம் வரை இவர் அதைப் படித்து முடிக்க மாட்டார்;. அதே நேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, அதன் உறுப்பினர்களையோ நாம் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது கிடையாது. பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி,  எமது மக்களின் வாக்குகளைப் பெற்று அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பல்வேறு சாக்குபோக்குகளைக் கூறி எமது மக்களை ஏமாற்றி வருகின்ற செயற்பாடுகளையே நாம் விமர்சித்து வருகின்றோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக, தற்போதைய ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆகியோருடன் தமிழ் மக்களது பிரச்சினைகள் பற்றிக் கதைத்து அவற்றை அவர்கள் தீர்ப்பதாக இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதன் பின்னர்தான் அவர்களுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததாகக் கூறி வாக்கு கேட்டிருந்த இவர்கள், இதுவரையில் எமது மக்களின் பிரச்சினைகளில் எதனைத் தீர்த்தார்கள்? என்பது எமது மக்கள் மத்தியில் இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. ஆக, இவர்கள் தமது மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசாமல், தங்களது சுயலாபங்கள் குறித்து மாத்திரமே பேசியுள்ளனர். ஏனென்றால், தேர்தலுக்கு முன்பதாக சமஷ்டி தீர்வுக்கு தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என இவர்கள் கூறினார்கள். ஆனால், இன்றைய நிலை என்ன? மேற்படி இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளார்களா?

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, எமது மக்களின் காணி, நிலங்களை விடுவிப்பது, அரசியல் தீர்வு, அபிவிருத்தி, வாழ்வாதாரம் என எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுமே இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆட்சியிலும் யுத்தத்தை வென்ற ஆட்சியிலும் நாம் அரசியல் ரீதியாகப் பங்கெடுத்திருந்தது, பல்வேறு அழிவுகளிலிருந்தும் எமது மக்களைக் காப்பதற்காகவே. அந்த வகையில் அந்தக் காலகட்டத்தில் நாம் எமது மக்களுக்கு ஆற்றவேண்டியப் பணிகளை இயன்றளவு ஆற்றியிருக்கிறோம். அதன்போது பல்வேறு எதிர்ப்புகளையும், தடைகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். அவற்றையெல்லாம் மீறி எமக்கிருந்த குறைந்தளவு அரசியல் பலத்தை வைத்து எம்மால் அந்தளவு பணிகளை ஆற்ற முடியுமென்றால், தற்போதைய சூழலில் அமைந்துள்ள இந்த ஆட்சியில் பங்கெடுத்து இணக்க அரசியல் நடத்திவரும் இவர்களால் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். எனினும் அதற்கு இவர்கள் முன்வருவதில்லை. அதாவது, எமது மக்களின் பிரச்சினைகள் தீரக்கூடாது என்பதை இவர்கள் தங்களது கொள்கையாக வைத்திருப்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வித் துறைக்குப் பொறுப்பான அமைச்சுப் பதவிகளை இவர்களே வைத்திருக்கும் நிலையில் கடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இந்த இரு மாகாணங்களும் கடைசி இரு இடங்களைப் பெற்றிருப்பத்திலிருந்தே இவர்கள் எமது மக்கள் தொடர்பில் எந்தளவுக்கு அக்கறை கொண்டு செயற்பட்டு வருகிறார்கள் என்பது வெளிப்படையாகின்றது.

எனவே, இவர் போன்ற நபர்கள் தங்களது செயற்பாடுகள் என்ன என்பதை முதலில் நன்கு அறிந்துகொண்டு, அதன் பின்னர் அடுத்தவர் பற்றிக் கருத்து கூற முன்வர வேண்டும்.

Related posts: