வடக்கில் காணப்பட்ட மேச்சல் தரை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்தானந்த அளுத்தகமே ஆகியோரது முயற்சியால் தீர்வு – வடக்கின் ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, September 30th, 2021

வடக்கு மாகாணத்தில் நிலவும் தேவைப்பாடுகளுள் ஒன்றாக கால்நடைகள் மேய்ப்பதற்கான மேச்சல் தரவைகள் இல்லாமை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மகிந்தானந்த அளுத்தகமே ஆகியோரது முயற்சியால் தீர்வு காணப்பட்டுள்ளதாக வடக்கின் ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – நீண்ட காலமாக நிலவிவந்த இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பாத்திரத்தின் மூலம் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்து 2 ஆயிரத்து 900 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது

வடக்கு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் – வடக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் 80 வீதமான நிதி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 84 திட்டங்களுக்காக 14 ஆயிரத்து 535 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் 2 ஆயிரத்து 200 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் பாசனத்திட்டம் மூன்று திட்டங்களாக நிறைவு படுத்தப்பட்டுள்ளது.

இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்திற்காக 3 ஆயிரத்து 200 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டு திட்டம் நிறைவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று மன்னார் கூராய் குள நீர்ப்பாசன திட்டத்துக்காக 150 மில்லியன் ரூபா திறைசேரியில் இருந்து பெறப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடக்கு விவசாயதுறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இத்திட்டத்தின் அடிப்படையில் மரக்கறி பயிர்ச்செய்கை 96 வீதம் கிழங்குச் செய்கை 50 வீதமும் உழுத்துச் செய்கை 90 வீதம் இடம்பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கு தமது உற்பத்தி பொருட்களை சேமித்து வைப்பதற்கான  களஞ்சியத் தொகுதி இல்லாமையால் பாரிய நெருக்கடிகளை எதிர் நோக்கினார்.

இதற்கு தீர்வு வழங்கும் நோக்கில் வடக்கு மாகாணத்தில் 100 மில்லியன் ரூபா செலவில் 5 மாவட்டங்களில் 10 களஞ்சியத் தொகுதிகளை ஆரம்பித்துள்ளோம்.

இதன்மூலம் 870 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்த முடியும். அத்துடன்  வடமாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகமும் மாங்குளப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய இயற்கைப் பசளை உரமாக்கும் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் ரூபா வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பாதுகாப்பான விளைச்சலையும் நஞ்சற்ற உணவு உற்பத்தியையும் ஏற்படுத்துவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆகவே வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கணிசமான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில்  ஊடகங்கள் மக்களுக்கு தேவையான விடயங்களை கொண்டு சேர்க்க வேண்டுமென  அவர் மேலும் தெரிவித்துள்டளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: