சுவரொட்டிகள் கட் அவுட் களுக்குத் தடை!

Saturday, February 3rd, 2018

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சுவரொட்டிகள், கட்டவுட்கள் மற்றும் பதாகைகளைக் காட்சிப்படுத்துவதற்கு  வியாழக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளின் போது அவற்றைப் பயன்படுத்த முடியாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன்சிறி ரத்னாயக்க குறிப்பிட்டார்.

கட்சி அலுவலகத்தில் மட்டும் 40 சதுர அடி பரப்பிலான ஒரு கட்டவுட்டை அல்லது பதாகையை மாத்திரம் காட்சிப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி நள்ளிரவு நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, உள்@ராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் மூன்றாம் கட்டம் தற்போது நடைபெறுகிறது. நேற்றும் இன்றும் தபால்மூல வாக்களிப்பு நடத்தப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. இந்த இரு தினங்களிலும் தபால் மூலம் வாக்களிக்காத அரச ஊழியர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.

இதேவேளை தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரையில் தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தங்களின் கிராம சேவை உத்தியோகஸ்தரிடம் அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பின்போது தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் போக்குவரத்து அனுமதிப் பத்திரம், கடவுச்சீட்டு அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆள் அடையாள அட்டைகள்  என்பவற்றில் ஒன்றை சமர்ப்பிப்பது கட்டாயமானது எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.

Related posts: