சுயநலக் கோமாளிகளின் சுயரூபம் வெளிவருகின்றது – அனந்தி!

Monday, February 13th, 2017

புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம் அம்பலமாகியுள்ளதாகவும் தமிழ் மக்கள் பேரவை சுயநலவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் அனந்தி சசிதரன் கருத்து வெளியிட்டுள்ளார்..

மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் எம்மை மேடையில் ஏற்றவில்லை மாறாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின் விடிவுக்கான எந்த அத்திவாரமும் தமிழ் மக்கள் பேரவையிடம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற எழுகதமிழ் நிகழ்வில் பெண்களுக்கு கதவடைப்பு நிகழ்ந்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பிலோ அல்லது மகளிர் தொடர்பிலோ ஒரு பெண்ணையாவது பேச அனுமதிக்கவில்லை.

60வீதம் பெண்களுள்ள நாட்டில் ஒருபெண்ணுக்கு பேசவோ மேடையில் சரிசமமாக அமர வாய்ப்பில்லையென்றால் எதிர்காலம் எப்படியிருக்கும் என அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எழுகதமிழின் விஞ்ஞாபனத்தைப் பார்த்தவுடன் காணாமல்போனோர் மற்றும் அரசியல் கைதிகள் மற்றும் இன்னொரன்ன விவகாரம் தொடர்பாக இடப்பட்டிருந்த காரணத்தினால் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் நானும் சக மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் சிவநேசன் மற்றும் 35 பெண்களோடு யாழ்ப்பாணத்திலிருந்து எனது சொந்தச்செலவில் மட்டக்களப்புக்கு சென்று கலந்து கொண்டேன்.

எமது வடமாகாண முதலமைச்சர் பிரதான பாத்திரமேற்ற அந்நிகழ்வில் வேண்டுமென்று எம்மை திட்டமிட்டு புறக்கணித்த ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. மேடையில் சகலரும் ஆண்களாகவே காணப்பட்டனர். பேசியவர்கள் அனைவரும் ஆண்கள். அங்கொரு ஆண்மேலாதிக்க மேல்வர்க்க சிந்தனையே தென்பட்டது.

ஏற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஊடகவியலாளர் சிலரை செலவழித்து அழைத்துவந்தனர்.

முதலமைச்சரும் இருவாகனங்களில் வந்திருந்தார். நாம் வருவது தெரிந்தும் யாரும் கேட்டதுமில்லை. ஏறெடுத்தும் பார்க்கவுவில்லை.

இருந்தும் எமது தமிழினத்திற்காக காணாமல்போனோரின் சார்பாக கலந்துகொள்ள வேண்மென்பதற்காக பெண்களின் குரலும் அங்கு ஒலிக்க வேண்டுமென்பதற்காக ஏற்பாட்டாளர்களிடம் உதவிகேட்டும் அவர்கள் இணங்காத காரணத்தினால் எனது சொந்தச்செலவில் 35பெண்களை யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து சென்றிருந்தேன்.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரேயொரு பெண் மாகாணசபை உறுப்பினர் நானொருவள்தான். அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து உணர்வோடு கலந்துகொண்டவள்.

எனக்கு மேடையில் அமரவோ பேசவோ சந்தர்ப்பம் தரவில்லை. பெண் என்ற ரீதியில் நான் பட்ட வலிகள் இவர்களுக்குத் தெரியுமா?

மேட்டுக்குடி வர்க்க அரசியல் நடாத்த தலைப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்ப்பேரவையில் பெண்ணுரிமை பெண்களுக்கான சமவாய்ப்பு பற்றி எப்படி கதைப்பது? பெண்களுக்கு இடமில்லாத அப்பேரவையில் எதிர்காலம் எவ்வாறிருக்கும்?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின் விடிவுக்கான எந்த அத்திவாரமும் இடப்படவில்லை என்பதே எனது கருத்தாகும். என அனந்தி சசிதரன் தனது உள்ளக் குமுறலை தெரிவித்துள்ளார்.

ananthi new_CI

Related posts: