சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் – நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

Thursday, April 4th, 2019

சுன்னாகம் உத்துரு ஜனனி மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுவதனால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டீ.பீ தெஹிதெனிய ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மின் உற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்குமாறு மின் உற்பத்தி நிலையத்தை நடத்திச் சென்ற நொதர்ன் பவர் கம்பனி பிரைவட் லிமிடட் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த 20 மில்லியன் ரூபா பணத்தை பாதிப்படைந்த ஒரு குடும்பத்திற்கு உயர்ந்த பட்ச நட்டஈடாக 40,000 ரூபா வீதம் பகிர்ந்து வழங்குமாறும் அதனை தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் குழு ஒன்றின் தலைமையில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட சுற்றாடல் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக இருந்தால் மட்டுமே மீண்டும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இயற்கை ஆய்வு மையத்தின் தலைவர் ரவீந்திர காரியவசத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் உத்துரு ஜனனி மின் உற்பத்தி நிலையத்தினால் வெளியாகும் கழிவுநீர், எண்ணை மற்றும் கிரீஸ் ஆகியவற்றினால் கிணற்று நீர் பாதிக்கப்படுவதாகவும் இதனால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த மனுவை கருத்திற் கொண்ட நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு இந்த மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: