சுன்னாகம் இளைஞர் படுகொலை:  சாட்சியங்களின் விபரம்!

Wednesday, March 22nd, 2017

கடந்த 2011ஆம் ஆண்டு திருட்டு குற்றச்சாட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையில் சிறிகந்தராசா சுமனன் என்பவர் கைது செய்யப்பட்ட தகவல்களோ அவரை வெளியே கொண்டு சென்றமை தொடர்பான தகவல்களோ உள்ளடங்கியிருக்கவில்லை என அப்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய பிரதீப் நிஷாந்த குமார யாழ். மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு கொள்ளை குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்களை அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிந்தக்க பண்டார தலமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரை குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து சித்திரவதை செய்து படுகொலை செய்திருந்ததாகவும் அதன் பின்னர் அவரை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசியிருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான வழக்கானது யாழ்.மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ் சித்திரவதை வழக்கின் சாட்சிப் பதிவுகளானது நேற்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் மா இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு சாட்சியொருவர் சாட்சியமளித்திருந்தார்.

நேற்றைய சாட்சிப் பதிவின் போது 9ஆவது சாட்சியாக பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் பிரதீப் நிஷாந்த குமார சாட்சியமளிக்கையில்,

“மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பி அறிக்கையில் சிறிகந்தராசா சுமனன் என்பவர் வெளியே கொண்டு செல்லப்பட்டமை தொடர்பான எந்த தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. மேலும் சிறிகந்தராசா சுமனன் என்பவரை கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவில் சிந்தக்கபண்டார, மயூரன், சன்ஜீவ ராஜபக்ஷ, ஜயந்த, வீரசிங்க, கோபிகிருஸ்னன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்கியிருந்ததாக குறிப்பிட்டார்.

அந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிரி கூண்டில் உள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், அவர்களை சுட்டுவிரலால் அடையாளம் காட்டி அவர்களது பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் எதிரி கூண்டில் ஏழாவது எதிரியான கோபிகிருஸ்னன் என்பவர் இல்லை எனவும் மேலதிகமாக வேறு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளார்கள் எனவும் குறித்த சாட்சியமளித்திருந்தார்.”

தொடர்ந்து இவ் வழக்கின் 12 ஆவது சாட்சியாக இணைக்கப்பட்டிருந்த பெண் உப பொலிஸ் பரிசோதகர் சிதேசிகா தோரகொட சாட்சியப் பதிவிற்காக அழைக்கப்பட்டிருந்தார். அவர் சாட்சியமளிக்கையில்,

“தாம் கடந்த 2011.11.25 அன்று, அன்றைய தினத்திற்கான கடமையை பொறுப்பேற்ற போது பொலிஸ் சிறையில் யாரும் இருக்கவில்லை. எனினும் கடமையை பொறுப்பேற்ற பின்னர் 11.50 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருந்தார். அப்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சிந்தக்க பண்டார என்பவரே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரின் பெயர் சுமன் என தமக்கு ஞாபகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் குறித்த சந்தேகநபரை மீண்டும் மறுநாள் காலையில் தாம் கடமையை பொறுப்பேற்ற போது கண்டதாகவும் அதன் பின்னர் தாம் பொலிஸ் நடமாடும் சேவைக்காக சென்றுவிட்டதாகவும்” அவர் சாட்சியமளித்திருந்தார்.

இவரது சாட்சியத்தை தொடர்ந்து இவ் வழக்கின் சாட்சியாக இணைக்கப்பட்டிருந்த 10ஆவது சாட்சியான பொலிஸ் கொஸ்தாபிள் உபுல் நலின் வீரசிங்க என்பவர் சாட்சியமளிக்கையில்,

“தாம் கடந்த 2011.11.25 அன்று அன்றைய தினத்திற்கான கடமையை பொறுப்பேற்ற போது 11.50 மணிக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான சிந்தக்க பண்டாரவினால் சந்தேகநபர் ஒருவர் பாரப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் அன்றைய தினம் தனது கடமையை வீரசிங்க என்பவரிடம் கையளிக்கும் போது குறித்த சந்தேகநபரான சிறிஸ்கந்தராசா சுமனன் என்பவரையும் கையளித்திருந்ததாகவும், மீண்டும் மறுநாள் தான் கடமையை பொறுப்பேற்ற போது குறித்த சந்தேகநபரும் தம்மிடம் பாரப்படுத்தப்பட்டதாக சாட்சியமளித்திருந்தார்.

அத்துடன் மறுநாள் மற்றவரிடமிருந்து கடமையை பாரமெடுத்த போது மேலும் நான்கு சந்தேகநபர்களை தம்மிடம் தந்திருந்ததாகவும் அன்றைய தினம் காலை 6.50 மணிக்கு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுமனன் என்ற கைதியை பாரமெடுத்ததாகவும், அவரை தமது அலுவலகத்திற்கு அழைத்து சென்றதையும் பின்னர் வெளியே அழைத்து சென்றதையும் தான் கண்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அன்றைய தினம் மீண்டும் சுமனன் என்ற கைதி தம்மிடம் பாரப்படுத்தப்படவில்லை எனவும் சாட்சியமளித்ததுடன், குறித்த கைதியை அழைத்து சென்ற பொறுப்பதிகாரியை எதிரில் கூண்டில் வைத்து சுட்டுவிரால் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டியிருந்தார்.”​

தொடர்ந்து இவ் வழக்கில் சாட்சியாக இணைக்கப்பட்டிருந்த 15 ஆவது சாட்சியான ஒய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரிடமும் பதிவுகள் இடம்பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் இவ் வழக்கின் சாட்சிப்பட்டியலில் இருந்து 11,13,14,16,17,18,19,20 ஆகிய சாட்சியங்களை விடுவிக்க மன்றின் அனுமதியை கோரி விண்ணப்பமொன்றை மேற்கொண்டிருந்தார். இவ் விண்ணப்பத்தை பரிசிலித்த நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனை தொடர்ந்து இவ் வழக்கின் மீதி சாட்சிப் பதிவுகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

Related posts: