சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றுங்கள் – தவறின் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

Monday, November 8th, 2021

பொதுமக்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றாவிட்டால், பாடசாலைகளையும், நாட்டையும் மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 10 முதல் 13 வரையான தரங்கள் இன்று (08) ஆரம்பிக்கப்பட்டன.

தற்போது சமூக மற்றும் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் சுகாதார நிலைமையைப் பாதுகாப்பது அவசியமானதாகும் எனப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அனைவரும் செயற்பட வேண்டும். அவ்வாறின்றேல், இந்நிலைமை மீண்டும் மோசமாகினால், நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மாணவர்கள் தற்போது மீண்டும் பாடசாலைகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், பாடசாலைகளை மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டால் அது மாணவர்களைப் பாரிய அளவில் பாதிக்கக்கூடும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரித்துள்ளார்

மக்கள் தமது உடை மற்றும் அலங்காரம் தொடர்பில் எவ்வளவு அக்கறை காட்டுகின்றார்களோ, அந்தளவுக்கு பொது இடங்களில் சுகாதார விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: