சுகாதார மேம்பாடுகளை இரட்டிப்பாக அதிகரிக்கும் போதே கொவிட் தொற்றுவீதம் குறையும் – மருத்துவர் யமுனாநந்தா!

Monday, August 2nd, 2021

சுகாதார மேம்பாடுகளை தற்போதைய சூழலில் இரட்டிப்பாக்க அதிகரிக்கும் போதே நோய் தொற்றுவீதம் குறைக்கப்பட்டு நோய் பரம்பல் கட்டுப்படுத்தப்படுமென யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொவிட் தொற்று நோய் பரவல் தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையினை கொவிட் தொற்று 3 அலைகளாக பாதித்துள்ளது. முதலாவது அலையானது 11.3.2020 தொடக்கம் 3.10.2020 வரை ஏற்பட்டது. இதில் 3 ஆயிரத்து 397 பேர் பாதிக்கப்பட்டனர்.

இரண்டாவது அலை 4.10.2020 தொடக்கம் 14.4.2021 வரை ஏற்பட்டது. இதில் 92 ஆயிரத்து 340 பேர் பாதிக்கப்பட்டனர்.

மூன்றாவது அலை 15.04.2021 இருந்து தற்போதுவரை உள்ளது. இதில் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 155 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கொவிட் தொற்றின் முதல் அலையின் போது இறப்புவீதம் 0.38 ஆகவும் (13 இறப்புக்கள் இரண்டாவது அலையின் போது இறப்புவீதம் 0.64 ஆகவும் (591 இறப்புக்கள்) மூன்றாவது அலையில் 1.75 ஆகவும் (3591) இறப்புக்கள் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில் கொவிட் தொற்றால் 90.15 வீதமானவர்கள் குணமடைந்தவர்களாகவும் 1.4 வீதமானவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இதேநேரம் கொவிட் தொற்றில் பாதிக்கப்படுபவர்களில் 12வீதமானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் 60 வீதமானோர் 21-60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் 7.4 வீதமானோர் 10 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர் எனவும் அவர் சட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே இலங்கையில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் தொற்றுடன் இறந்துள்ளனர். 240 கர்ப்பிணித்தாய்மார்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே முகக்கவசம் அணிதலை முறையாக கடைப்பிடித்தல் வேண்டும். முகக்கவசம் அணிதல் நேரத்தினை இரட்டிப்பாக்குதல் வேண்டும். இவ்வாறு சுகாதார மேம்பாடுகளை தற்போதைய சூழலில் இரட்டிப்பாக்க அதிகரிக்கும் போது நோய் தொற்றுவீதம் குறைக்கப்பட்டு நோய் பரம்பல் கட்டுப்படுத்தப்படும்.

கொவிட் தொற்றின் பாதிப்பிலிருந்து முற்றாக விடுபட பொதுமக்களினதும் மருத்துவப் பணியாளர்களினதும் இடையறாத பங்களிப்பு தற்போது அத்தியாவசியமாகின்றதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: