சுகாதார அதிகாரிகள் சான்றிதழ் எதனையும் வழங்கவில்லை – தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Monday, April 27th, 2020

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆரோக்கியமான சூழல் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சான்றிதழ் எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நிலைமைகள் எவ்வாறு உள்ளதென்பதை அவதானித்தே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மே மாதம் 2 ஆம் திகதி கூடும் ஆணைக்குழுவின் கூட்டத்திலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் தாக்கம் நாட்டில் தொடர்ந்த வண்ணமே உள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவற்றைக் தெரிவித்துள்ளார்.

கேள்வி:- “கொவிட் -19 “கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் நிலவுகின்றது. இந்நிலையில் எந்த நம்பிக்கையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடிவும் எனக் கூறினீர்கள்?

பதில்:- “கொவிட் -19” கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மருந்தொன்று கண்டுபிடிக்கும் வரையில் உலகில் கொரோனா வைரஸ் பரவல் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததேயாகும். அவ்வாறு இருக்கையில் இலங்கைக்கு மட்டும் இது விதிவிலக்காக அமையப்போவதில்லை.

இலங்கையில் நிலவும் மோசமான சூழ்நிலையில் தேர்தலை நடத்த முடியாது. அதுமட்டுமல்ல மே மாதம் இறுதியில் தேர்தலை நடத்த முடியுமா என்ற கேள்விக்காக தேர்தல்கள் ஆணைக்குழு கூடி விடையை வழங்கியுள்ளது.

மே மாதம் இறுதிக்குள் தேர்தலை நடத்த முடியாது. ஆகவே அதனை தெளிவாக அரசாங்கத்திடம் கூறிவிட்டோம். ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்பட வேண்டிய தேர்தலுக்கு பதிலாக மிகவும் பொருத்தமான நாளொன்று தெரிவுசெய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் ஜூன் மாதம் 20 ஆம் திகதியை வழங்கியுள்ளோம்.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியுமா என்ற கேள்வியை இன்னும் அவர்கள் எம்மிடம் கேட்கவில்லை. கேட்காத கேள்விக்கு நாம் பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை. அரசியல் அமைப்பின் பிரகாரம் திகதி வழங்கப்பட வேண்டிய கட்டயாம் உள்ளதால் நாம் அடுத்த திகதியை கொடுத்துள்ளோம்.

நாம் இன்னமும் நிலைமைகளை ஆராய்ந்தே வருகின்றோம். எப்போதாவது தேர்தல் நடக்கும் அது ஜூன் 20 ஆம் திகதியா அல்லது செப்டெம்பர் 30 ஆம் திகதியா என்பதை இன்னமும் யாரும் தீர்மானிக்கவில்லை. நாடு பூரணமாக பாதுகாப்பில் உள்ளதாக வைத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. எந்தவித அச்சுறுத்தலும் இல்லாது நாடு பாதுகாப்பில் உள்ளது என்ற சான்றிதழ் வைத்திய அதிகாரிகளினால் வழங்கப்படும்போது நாம் அடுத்த கட்ட தீர்மானம் எடுப்போம்.

கேள்வி:- மே மாதம் 2 ஆம் திகதி இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமா?

பதில்:- இறுதித் தீர்மானம் எடுக்க நாம் அன்றைய தினம் கூடவில்லை. அரசியல் கட்சிகள் அனைத்தையும் வரவழைத்து அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை வினவி அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பதை ஆராயவே அன்றைய தினம் அழைப்பு விடுத்துள்ளோம். மேலும் நெருக்கடி நிலவினால் திகதி மாற்றப்பட்டாக வேண்டும். வெகு விரைவில் நாடு மீண்டெழும் என நாம் பிரார்த்திக்கின்றோம்.

வெகு விரைவில் தேர்தலை நடத்தலாம் எனவும் நினைக்கிறோம். ஆனால் இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

மக்களிடம் பொய்களை கூற நாம் தயாரில்லை, இப்போதுள்ள நிலையில் தபால் மூல வாக்குகளை கூட நடத்த முடியாத நிலைமை உள்ளது என்பதே உண்மையாகும்.

மூன்றில் ஒருவீத அரச ஊழியர்களை மட்டுமே கடமைக்கு வரவேண்டும் என அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு தபால் வாக்குகளை நடத்துவது. இவ்வாறான பல கேள்விகள் உள்ளது.

இவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் கொவிட் -19 இருக்கும் வரையில் நெடுக்கடிக்கு முகங்கொடுத்தாக வேண்டும்.

கேள்வி:- ஒரு தேர்தலை எத்தனை தடவைகள் பிற்போட முடியும்?

பதில்:- இந்த கேள்விக்கு பதில் கூறுவது கடினமானது. தேர்தலை நடத்த வேண்டும் என்பதே சட்டமும் கூறுகின்றது. ஆனால் இவ்வாறான எதிர்பாரத சூழலில் மக்கள் இல்லாது தேர்தலை எவ்வாறு நடத்துவது.

அவ்வாறு நடத்தினால் அது ஜனநாயக தேர்தலாக அமையாது. இவை அனைத்திற்கும் விடை கிடைக்க வேண்டுமென்றால் கொவிட் -19 வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவதே ஒரே வழிமுறையாகும்.

தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை சுகாதார அதிகாரிகள், மக்கள், அரசாங்கம் என அனைவருமே தீர்மானிக்க வேண்டும். எம்மை பொறுத்தவரை மக்கள் பங்குகொள்ளாத தேர்தலை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.

மக்கள் மூலமாக தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகள் தேவையில்லை என்பதே எமது கருத்தாகும். ஆகவே நாட்டினை மீட்டெடுக்கும் வேலையை முதலில் அனைவரும் இணைந்து முன்னெடுங்கள் என்பதை மட்டுமே எம்மால் கூற முடியும். இன்னும் எத்தனை தடவைகள் தேர்தலை பிற்போடுவதென்பது எமக்கும் தெரியவில்லை.

கேள்வி:-தேர்தல் நடத்த வேண்டும் என்ற காரணிகளில் நீங்கள் அழுத்தங்களை சந்திக்கிறீர்களா?

பதில்:- அவ்வாறு எந்த அழுத்தங்களும் இல்லை, எமக்கு அழுத்தம் கொடுத்து தேர்தலை நடத்த கூறவும் முடியாது. முதலில் நாடு சாதாரண நிலைக்கு வரவேண்டும். அவ்வாறு இல்லாது எந்த அழுத்தத்தின் மத்தியிலும் தேர்தலை நடத்த முடியாது.

20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்னமும் காலம் உள்ளது. இப்போது வரையில் நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றோம். ஆனால் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

கேள்வி:- ஆணைக்குழு உறுப்பினர்கள் இடையே முரண்பாடுகள் உள்ளதா?

பதில்:- ஆணைக்குழு உறுப்பினர்கள் இடையே வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளது உண்மையே. ஆனால் நாம் மூவரும் ஒரே வழியில் பயணிக்கின்றோம்.

தேர்தலை நடத்த முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சில காரணிகளில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். அவற்றை நான் கருத்தில் கொள்ள தயாராக இல்லை.

கேள்வி:- தேர்தலை பகுதி பகுதியாக நடத்த முடியுமா?

பதில்:- அவ்வாறு நடத்த தேர்தல்கள் சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இம்முறை அவ்வாறு நடத்த முடியுமா என்ற தீர்மானம் எடுக்கவில்லை. தேர்தல்கள் ஆணைகுழுவின் மூவரும் இணைந்து இது குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

எம்மால் இதில் தனித்தனி தீர்மானம் எடுக்க முடியாது. இந்த கேள்விக்கு என்னால் பதில் ஒன்றினை கூற முடியாது. தேர்தலை பகுதி பகுதியாக நடத்தினாலும் முடிவுகளை ஒரு தினத்தில் வழக்கப்படும்.

கேள்வி:- ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என்ற சுகாதார அதிகாரிகளின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா?

பதில் :- ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என சுகாதார அதிகாரிகளின் சான்றிதழ் இன்னமும் வழங்கப் படவில்லை. அவ்வாறு இப்போது எவரது சான்றிதழை எதிர்பார்க்கவும் முடியாது.

இன்று பலர் தனிமைப்படுதல் முகாம்களில் உள்ளனர். அவர்களின் வாக்கு எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்து எந்த ஆலோசனைகளும் வழங்கபடவில்லை.

கொழும்பு உள்ளிட்ட அதி விசேட கவனம் செலுத்தப்படும் பகுதிகளில் எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை. மே மாதம் 10 ஆம் திகதி ஒரு பேச்சுவார்த்தை உள்ளது.

கேள்வி:- தேர்தல் பிற்போடப்படும் என்றால் இப்போது பெறப்பட்ட வேட்புமனுத்தாக்கல் செல்லுபடியற்றதாகுமா?

பதில்:- இல்லை, அவ்வாறு எந்த மாற்றங்களும் இடம்பெறப்போவதில்லை. மே மாதம் 4 ஆம் திகதி கட்சிகளுக்கான சின்னம், இலக்கம் வழங்கப்படும்.

ஆகவே இதுவரை இடம்பெற்ற செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படாது. ஆனால் தேர்தல் உரிய நேரத்தில் நடத்த முடியுமா என்பதை உறுதியாக கூற முடியாது.

Related posts: