சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சேன் யிங்க் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு – மிக விரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உடன்பாடு!
Tuesday, November 21st, 2023
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவுகளுக்கு ஜனாதிபதி, இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன தற்போது முதலீட்டுக்குத் தயாராக இருகின்றன.
பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பெல்ட் என்ட் ரோட் (Belt & Road) திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப் பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் பிரவேசிக்க, இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதியினால் விளக்கமளிக்கப்பட்டது.
இந்துசமுத்திரம், கடற்பயணத்திற்கான சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப் போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தநிலையில், சீனா- இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்தன.
இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


