சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லை – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Saturday, March 25th, 2023

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்திற்கமைய சிவில் பாதுகாப்பு சேவை, (Depreciating service) காலாவதியாகும் சேவையாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம் நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் பிரகாரம், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு 60 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு, 55 வருடங்களில் சேவைக்கால நீடிப்பைக் கோர முடியும் எனத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, அவ்விடயங்கள் எதுவும் மாறவில்லை எனக் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்திலும் மாற்றம் செய்யும் நோக்கம் இல்லையென்றும் அவர் வலியுறுத்தினார்.

மொரட்டுவ கட்டுபெத்தவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்தில் அத் திணைக்கள அதிகாரிகளால் ஆற்றப்படும் சேவையை பாராட்டும் வகையில் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: