சிறையிலுள்ள உறவுகளைப்பார்க்க இன்றுமுதல் மீண்டும் அனுமதி – சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை!

Monday, October 4th, 2021

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சிறைக் கைதிகளை  பார்வையிடும் நடைமுறை இன்று திங்கட்கிழமைமுதல் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்பதாக நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிமுதல் சிறைக் கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

நாட்டில் நடைமுறையிலிருந்த தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு சட்டம் கடந்த முதலாம் திகதியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறையின் வழிமுறைகளை பின்பற்றி இன்று 4ஆம் திகதிமுதல் சிறைக்கைதிகளை பார்வையிடும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாட்டில் இன்னும் முழுமையாக வைரஸ் தொற்று பரவல் ஒழிக்கப்படவில்லை எனினும் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சிறைக் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் முடிந்தளவு  e-visit முறைமை மூலம் சிறைக் கைதிகளுக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: