மின் கட்டண திருத்தத்தை தவிர வேறு வழியில்லை – அமைச்சர் பந்துல குணவர்தனஅறிவிப்பு!

Wednesday, January 25th, 2023

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்வதே மின்சாரப் பிரச்சினைக்கு ஒரே மாற்று என்றும் இல்லையேல் முன்பைப் போன்று நீண்ட மின்வெட்டு ஏற்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நிலக்கரிக்காக 38 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியிருக்கும் எனவும், மாதாந்த வருமானம் 35 பில்லியன் ரூபாவாகும் எனவும், செலவுகள் அதிகமாகும் சூழ்நிலையில் செலவுகளை தாங்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்றவற்றுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாத நிறுவனமாக மின்சார சபை தற்போது மாறியுள்ளதாகவும், இவ்வாறான நிலையில் வர்த்தக வங்கிகள் சபைக்கு கடன் வழங்காது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையின் போது தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க முடியாதா என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் மேலும் வினவியபோது, ​​துண்டிப்பின்றி மின்சாரத்தைப் பேணுவதற்கு 5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இது மின்வெட்டு அல்ல என்றும் மாலை மற்றும் இரவில் இரண்டு மணி நேரம் மாத்திரமே மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றும், ஏதாவது செய்ய முடிந்தால் அரசு தாமதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: