சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் அவசியம்: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் !

Friday, October 14th, 2016

கடந்த ஆண்டு யாழ். மாவட்டத்தில் 48 சிறுமிகள், சிறுவர்கள்  துஸ்பிரயோகம்,  துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர். தற்போது அது 60 சிறுமிகள், சிறுவர்களாக உயர்ந்துள்ளது.  இவ்வாறான நிலை மாற்றப்படவேண்டும். அதற்கு  அனைத்துத் தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும்   அவசியம் எனத் தெரிவித்துள்ளார்  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன்.

யாழ். மாவட்டச் சிறுவர், நன்னடத்தைப்  பாராமரிப்பின் ஏற்பாட்டில் சிறுவர்கள்  நலன்களின் எதிர்காலச் செயற்றிட்டம்எனும் கருப்பொருளிலான சிறுவர் மேம்பாட்டுக் கலந்துரையாடல் நேற்று  (13) முற்பகல் யாழ் .மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அரசாங்க அதிபர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் சிறுவர்கள் தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு விசேட செயற்றிட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் சிரியவர்களுக்கெதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற தருணத்தில் இவற்றிற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்குப் பிரதேச  மட்டத்தில் விசேட செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஐனாதிபதியின் பணிப்பில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது மாவட்டத்தில் கடந்த ஆண்டு சிறுவர்கள் தொடர்பான நன்னடத்தைப் பராமரிப்பில் 15 சிறுவர்கள் வன்முறைச் சம்பவங்களிலிருந்து மீட்கப்பட்டு மீளவும் சமூகத்துடன்  இணைக்கப்பட்டுள்ளனர்.   தற்போது சமூக வலைத்தளத்தின் ஊடாக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  இதனை அனைத்துத் தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

unnamed

Related posts: